Archive for the ‘கவிதை (Poems in Tamil)’ Category

பெருவாழ்வு

January 2, 2011

அழகான பூக்கள் வசிக்கும் வனத்தினுள்
சிறகடித்துப் பறக்கும்
பட்டாம்பூச்சியாய் வாழ்ந்துவிட்டு
நீலவானில் மறைந்துபோகும்
பெருவாழ்வு
எல்லோருக்கும் வாய்க்கும்.

மனிதன் வாழ்வது மனதில்தானே?

02.01.11

கேள்வி

January 2, 2011

எல்லாக் கனவுகளையும்
இங்கே விட்டுவிடுகிறேன்.

சந்தோஷங்களும் துக்கங்களும்
இனி வேண்டா.

இருத்தலும் விருப்பும் வெறுப்பும்
இல்லா வெளியில்
நீயும் நானும் துரும்பிலும் துரும்பு.

கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும்
கதிரவனில் கரையும் பனித்துளி
எங்கே போகிறது? எங்கே பிறக்கிறது?

பதில் இல்லாக் கேள்வியின் கொக்கிகள்
நீயும் நானும் நாமும்.

02.01.11

இரவல்

February 22, 2010

காலத்தின்
இக்கணத்தில்
நானும் நாங்களும் நாமும்
இங்கிருக்கிறோம்.

இக்கணம் தரும்
மகிழ்ச்சியும் துக்கமும்
எவருக்கும் சொந்தமல்ல.

காலம் தரும் இரவல்.
ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்கு.
ஒரு கணத்திலிருந்து இன்னொரு கணத்திற்கு.

22.02.2010

வெள்ளந்தி மனிதர்களின் சூட்சுமம்

December 29, 2009

கரும்புள்ளிகள்

எதுவும் இல்லாத

வெண்மை நிற மனிதர்கள்

வசிக்கும்

தெருக்களின் வழியே

போகும்போது கவனமாய் இருங்கள்.

தங்கள் வீடுகளில் பத்திரமாய் இருக்கும் அவர்கள்

உங்கள் வருகையை எதிர்பார்த்துக்

காத்திருக்கிறார்கள்.

அவர்களின் வீடுகளில் ஏற்றப்பட்டிருக்கும்

வெண்ணிறக் கொடிகள்

என்றும்

அவர்கள் புகழ் பாடும்.

அதை விரும்பாத பாவனைகளோடு

உங்களை அன்போடு வீட்டிற்குள்

அரவணைத்துக் கொள்வார்கள்.

வெள்ளை நிறக் கடவுள்களும்

வெள்ளை நிற தேவதைகளும்

உங்கள் அருகே இருப்பதாக

நீங்கள் மதி மயங்கும் நேரம்

உங்கள் ரத்த நாளங்களை உறிஞ்சி எடுத்து

தங்கள் வாழ்நாள் தாகத்தைத் தீர்த்துக் கொள்வார்கள்.

பிறகு…

தங்கள் கொடிகளை

இன்னும் கொஞ்சம்

உயரப் பறக்கவிடுவார்கள்.

தங்கள் தெருவோரம்

உங்களுக்காக

கருஞ்சிலை ஒன்றினை

வைப்பார்கள்.

அந்தத் தெருக்களை

கவனமாய்க்

கடந்து செல்லுங்கள்.

சூட்சுமங்களால் ஆனது வாழ்க்கை.

19.10.2008

வலி

December 17, 2009

செயல்கள் எல்லோருக்கும்

எளிதானவைதான்.

எளிதில் முறித்துப் போடும்

ஈர்க்குச்சி

ஒரு எறும்பின் இதயத்தைத்

துளைப்பது போல.

(குறிப்பு: 2006-ல் எழுதியது. தேதி மறந்துவிட்டேன்.)

பாதை

December 15, 2009

அன்பின் கணங்களுக்கும்

கைவிடப்பட்ட கணங்களுக்கும்

நடுவில் உள்ள

மிகமிகமிகமிகமிகமிகச் சிறிய இடைவெளியில்

கற்களும் பூக்களும்

அவரவர் கணங்களில் விழுகின்றன.

நல்லோரும் தீயோரும்

அந்தந்தக் கணங்களில் தோன்றுகிறார்கள்.

அவன் அறியாத ஆயிரம் கணங்கள்

பாதை வழி விரிந்தாலும்

அவன் அறிந்த ஒரு கணம்

எப்போதும் உண்டு.

அக்கணத்தில்

அவனுடைய கவிதை

அவனை அணைத்துக்கொள்ளும்.

(குறிப்பு: 04.03.07 அன்று எழுதிய கவிதை.)

சுதந்திரம்

December 12, 2009

காயங்களின் வடுக்கள் வழியே
எப்படியாவது
உள்ளே புகுந்து விடுகின்றன பூச்சிகள்.
பூச்சிகள்
ஊறும் சமயங்களில்
நாளங்கள் அதிர்கின்றன.
உள்ளம் ஒடுங்கி உறைகிறது.
ஒளிந்து கொள்ளும் பூச்சிகள்
எப்போது வெளிவருமென்ற
பதட்டத்தில்
ஒவ்வொரு பொழுதும்.
பூச்சிகள் வெளியே வந்தபோது
அவற்றிற்கு சிறகுகள் முளைத்திருந்தன.
ஆசுவாசமாய் இருந்தது.
எனக்கும் பூச்சிகளுக்கும்.

(குறிப்பு: 12.01.06 அன்று எழுதிய கவிதை.)

நட்பு

December 12, 2009

வெள்ளையன்
என்றொரு நண்பன்
எனக்கிருந்தான்.
பள்ளிவிட்டுத் திரும்பும்
இளவெயில்
பொழுதில்
எனக்கெனக் காத்திருப்பான்.
இந்த உலகத்தின்
பெருவெளிக்குள்
என்னை
முதன்முதலாக
அழைத்துச் சென்றவன்.
அவன் உலகத்தில்
என்னைத் தவிர
யாருமில்லை.
எல்லாப் புதிர்களும்
தன்னை அவிழ்த்து
எளிமையாய்
அவனிடம் நின்றன.
வார்த்தைகளும்
அர்த்தங்களும்
அற்ற ஒரு மொழியில்
என்னிடம் அவன்
பேசிக் கொண்டேயிருந்தான்.
காலத்தில் உறைந்து கிடக்கும்
அந்தக் கணங்களை
என் மகன் உணரும்
அந்தத் தருணத்தில்
வெள்ளையன்
மீண்டும்
உயிர்த்தெழுந்து வருவான்.

(குறிப்பு: 12.01.06 அன்று எழுதிய கவிதை.)